Wednesday, December 27, 2017

அம்பட்டன் கத்தி

மீன் விற்கிற விலையில் வாரத்திற்கு ஒரு முறை மீன் வாங்குவது என்பதே கட்டுப்படி ஆவதில்லை ஆனாலும் மீனுக்கு ஆசை என்ன செய்ய என்ற ஆதங்கத்திற்கு என்னால் ஆன தொண்டாக ' பட்டையைக் கிளப்பும் சுவையில் பட்ஜெட் மீன்கள்' என்று எனக்குத் தெரிந்த குறிப்புகளை அவ்வப்போது வழங்கலாம் என்றிருக்கிறேன்.
பட்ஜெட் மீன்கள் என்பதால் கௌரவக் குறைச்சல் என நினைக்கும் ஆட்கள் வஞ்சிரம் வாங்கியே உய்யவும். கிலோ ஐம்பதுக்கு கிடைக்கும் மீனில் வாவலின் சுவையைக் காணும் வழி வகைகளை இங்கே பார்ப்போம்.
இன்றைக்கு எடுத்துக்கொள்ளப் போகும் மீன் பெயர் மேனீ மக்குலாட்டா (Mene maculata) - அம்பட்டன் பாரை, அம்மாடிகட்டி, அம்பட்டன் கத்தி (நன்றி பெயர் காண உதவிய விக்கிபீடியாவிற்கு). சென்னையில் இதனை காரை , பெரிய காரைப் பொடி என்று சொல்கிறார்கள். ஆனாலும் காரப்பொடி வேறு வகை, அதனோடு இதைக் குழப்பிக் கொள்ளாமல் இருக்க படத்தைப் பார்த்து மனதில் இருத்திக் கொள்க.

இந்த மீன்கள் ஏப்ரல்,மே மாதங்களில் நிறைய விற்பனைக்கு வரும். மற்ற டைமில் அவ்வப்போது காணக் கிடைக்கும். ஒன்றரை கிலோ நூறு ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கினேன். மிகவும் சுவை குறைந்த மீன் வகை என்பதே இதன் விலை குறைவிற்குக் காரணம். உண்மையும் கூட.
சுவையில் மரக்கட்டைக்கும், இதற்கும் யாதொரு வேறுபாடும் காண இயலாது. ஆனால் இதே மீனை வாவலின் சுவையில் கொண்டுவர எளிய வழி உள்ளது. மீனை சுத்தம் செய்து மஞ்சள் பொடியும், உப்பும் வழக்கத்திற்கு மாறாக சற்றே கூடுதலாய்க் கலந்து, சோம்புத்தூள், மிளகாய்ப்பொடி (விரும்பினால் பூண்டு பேஸ்ட்) சேர்த்து ஃப்ரிஸரில் வைத்துவிடவும்.
அடுத்த நாள் காலையில் எடுத்து வெளியில் வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஐஸ் உருகி மதிய சமையலுக்கு வருவல் செய்ய தயாராகிவிடும். (மசாலா ஃப்ரெஷ்ஷாக சேர்க்க விரும்பினால் , வெறும் உப்பு மஞ்சள் தூள் கலந்து ஃபிரிஸரில் வைத்து மசாலாவை அடுத்த நாளும் சேர்த்துக் கொள்ளலாம்).
தயாரான மீனை வருவல் செய்து சுவைக்கும் போது வாவல் மீன் என்று சொல்லி கொடுத்தாலும் ஆமாம் என்றே தோன்றும் சுவையோடு இருக்கும். மதியம் வருவல் செய்த மீனை சூடு ஆறியதும் ஃபிரிஜ்ஜில் வைத்து இரவுக்கு சாப்பிடுவீர்களேயானால் இரட்டிப்பு சுவையோடு இருக்கும். பொதுவாக சுடச் சுட மீன் வருவல் சாப்பிடத்தான் விரும்புவோம். விரால் மீனெல்லாம் சூட்டோடு சாப்பிடும் போது அள்ளும், ஆனால் இந்த அம்பட்டன் பாரை ஆற ஆற வெல்லும்.
ஆமாய்யா, மீனை வாங்கினோமோ தின்னமான்னு இல்லாம இப்படி பொறுமையெல்லாம் ஆகாது என்போருக்கு, நானும் பரக்காவெட்டிதான் என்று சொல்லிக் கொள்கிறேன், அன்றைய நாளுக்கு பரக்காவட்டி நாக்கிற்கு என்ன மீன் வேணுமோ அதை வாங்கிக் கொண்டு அப்படியே இந்த மீன் கண்ணில் படும் போது இரண்டு கிலோ வாங்கி வந்து ஃப்ரிஸரில் வைத்துக் கொள்க.வாரம் முச்சூடும் சுவையான மீன் சாப்பிடலாம். வெறும் ரசம் பிளஸ் ரெண்டு துண்டு வருவல் என நம்ம பர்சுக்கும் பங்கம் வராது.

Friday, December 25, 2015

சங்கரா மீன் (Red snapper)

இடையில் நிறுத்தப்பட்டிருந்த மீன் தொடரை மீண்டும் ஆரம்பிக்கிறேன். இனி அவ்வப்போது கட்டுரைகள் வரும்.

இன்றைய கட்டுரையில் சங்கரா மீனைப் பற்றி பார்க்கலாம்.

சங்கரா மீன்கள் (Red Snapper) மீன்களிலேயே பல வகைகள் உண்டு.பார்வைக்கு, கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்ற அழகுடன் இளஞ்சிவப்பு நிறத்தை பொதுவான பண்பாக கொண்டிருக்கும் சங்கரா மீன்கள் நம்ம ஊரில் பரவலாய் அதிகம் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்று.

சங்கரா மீன் பொதுவாக குழம்பிற்கு ஏற்றவை. புளி சற்று தூக்கலாக ஊற்றி ஃப்ரெஷ் சங்கரா மீன் போட்டு வைக்கப்படும் மீன் குழம்பு பெரிய மெனக்கெடல் இல்லாமலேயே அட்டகாசமான சுவையோடு இருக்கும்.வறுவலுக்கும் சுவையாகவே இருக்கும்.பொதுவாக சங்கரா மீன்கள் எளிதில் உடையும் தன்மையோடு இருக்கும் என்பதால் வறுவல் செய்ய வேண்டுமாயின் சற்று பெரிய சைஸ் சங்கராவைத் தேர்வு செய்ய வேண்டும். கிலோவிற்கு மூன்றிலிருந்து நான்கு மீன்கள் நிற்கும் அளவிற்கான சைஸில் இருப்பவை வறுவலுக்கு நல்ல சுவையுடனும் உடையாமலும்  இருக்கும். மிகச் சிறிய அளவிலான மீன்கள் அதாவது நகரை மீன்கள் சைஸில் இருப்பவை சுவையோடு இருப்பினும் அவை எளிதில் உடைந்துவிடும் என்பதால் சாப்பிட ஏதுவாக இராது. குழம்பு நொறுங்கிக் கிடக்கும் முட்களால் விரவிவிடும்  என்பதால் மிகச் சிறிய சைஸ் சங்கரா மீன்களை தவிர்ப்பது நலம். போலவே பல பொடிகள் சேர்த்து வைக்கும் குழம்பில் சங்கராவை தவிர்த்து விடுதலும் நலம். ஏனெனில் விரைவாக வெந்துவிடும் தன்மையுடைய இவை மற்ற வகை மீன்கள் வேகும் நேரத்தில் உடைந்து கரைந்து குழம்பெங்கும் முட்களாய் விரவிவிடும். இம்மீன்களின் இன்னொரு மைனஸ் இதன் வாடை. கவுச்சி வாசம் அதிகம் அடிக்கும் மீன்களில் சங்கராவும் ஒன்று.பொதுவாக மீன்களின் வாடையைப் போக்க சுத்தம் செய்யும் போது மஞ்சள் தூள் சேர்ப்பார்கள், சங்கராவிற்கு சற்று கூடுதலாக மஞ்சள் தூள் சேர்த்து அலச வேண்டியிருக்கும்.

 சங்கரா மீன்கள் கிலோ 200 லிருந்து அதிபட்சமாய் கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இது சுவையுடைய மீனா என்றால் என்னைப் பொருத்த மட்டில் இல்லை என்பேன். காரணம் இதை விட குறைவான விலையில் கூடுதல் சுவையுடன் கூடிய மீன்கள் வெரைட்டி நிறைய உண்டு. மற்ற மீன்களைப் பற்றி அதிகமாய் தெரியாததாலும், பரவாயில்லை என்று வகையில் இதன் சுவையிருப்பதால் சேஃபர் சைடாகவும் மற்றும் கவர்ந்திழுக்கும் இதன் நிறம் ஒரு காரணமாகக் கூட இவை அதிக மக்களால் வாங்கப்படுகிறதோ என்கிற எண்ணம் உண்டு.

இங்கே முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, நம்ம ஊரில் கிடைக்கும் சங்கரா வகைகளில் இரண்டு வகை முக்கியமானது. அவற்றில் ஒன்று நல்ல சுவையுடன் இருப்பவை மற்றொரு வகை   சப்பென்று இருக்கும். இந்த இரண்டாவது வெரைட்டி கிலோ 80 ரூபாயிலிருந்து 150 வரை பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். ஆனாலும் அவற்றை முதல் தர வெரைட்டியின் விலையில் வித்தியாசம் தெரியாதவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.போலவே நகரை மீன்களையும் அதன்      இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து சங்கரா எனவும் விற்பார்கள். நகரை சுவையான மீன் எனினும் நகரையை சங்கராவைவிட குறைந்த விலையில் வாங்கலாம்.




மேலே இருக்கும் இரு வகை சங்கராவில் பளிச்சென்று மின்னும் இளஞ்சிவப்பில் மஞ்சள் பார்டர் அல்லது பார்டர் இன்றி வெண்மையாகவோ வயிற்றுப் பகுதியில் இருப்பவை முதல் வகை. சற்றே வெளிர் பிங் நிறத்தில் ஃப்ளோரசண்ட் பார்டர் வயிற்றுப் பகுதியில் தெரிபவை இரண்டாம் வெரைட்டி. சமயத்தில் முதல் வெரைட்டி பழைய மீனாகும் பட்சத்தில் வெளுத்துப் போய் இரண்டாவது வெரைட்டி போன்றே தோன்றும் எனினும் அவையும் வாங்க உகந்ததல்ல. மூன்றாவது படம் நகரை மீன். இளஞ்சிவப்பு பொதுப் பண்பு என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு நகரைக்கும் சங்கராவிற்கும். நகரை மீன்களைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியிருந்தேன்.


அவ்வப்போது மாற்றுச் சுவைக்கு சங்கரா மீன்களை சுவைக்கலாம். குறிப்பாக சங்கரா மீன்களில் முதல் வெரைட்டியில் பெரிய சைஸ் மற்றும் ஃப்ரெஷ் சங்கரா கிடைத்தால் தயங்க வேண்டியதில்லை. 

Saturday, May 30, 2015

விளை மீன் - Emperor Fish

மீன் தொடரில் இன்றைக்கு விளை மீனைப் பற்றி பார்ப்போம். வெல மீன் என்று பரவலாய் உச்சரிக்கப்படும் இந்த மீன் வகை தமிழகத்தில் அனேக இடங்களில் ரெகுலராகவே கிடைக்கும். சிலேப்பி(திலேப்பியா) மீனைப் போன்ற அமைப்பில் இருக்கும் இந்த மீன்கள் மிகச் சிறிய அதாவது கிலோவிற்கு இருபது மீன்கள் நிற்கும் அளவிலிருந்து அதிக பட்சமாக ஒரு மீனே இரண்டு மூன்று கிலோ வரை உடைய அளவிலும் கிடைக்கும். இன்னும் பெரிய அளவிலும் இவை வளரும். இங்கே விற்பனைக்கு வருபவற்றில் அதிகபட்சமாக மேற் சொன்ன எடை அளவிலேயே கிடைக்கும்.

 முந்தைய தொடரில் பார்த்த ஊடகம் மீனைப் போன்ற விளை மீன்களும் குழம்பிலும் அசத்தும், வறுவலிலும் பிரமாதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையில் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் சிக்கலான முள் அமைப்பும் கிடையாது.

விளை மீன்களில் பல ரகங்கள் உண்டு. சற்றே சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிற விளை மீன்களும், இளஞ்சிவப்பு விளை மீன்களும் இங்கே அதிகமாய் கிடைக்கும் வகைகள். இவை இரண்டையும் ஒப்புமை படுத்தும்போது இளஞ்சிவப்பு விளை மீன்கள் சற்றே கூடுதல் சுவையோடு இருக்கும். ஆனாலும் வெள்ளை நிற விளை மீன்களும் சுவையானவையே, மேலும் அவைதான் பெரும்பாலும் விற்பனைக்கு அதிகமாய் வரும்.

சிவப்பு விளை மீன்களில்கூட சிறு சிறு வேறுபாடுகளுடன் நிறைய வெரைட்டிகள் உண்டு. தோள் தடிமனாய் ஒரு வகை உண்டு. அவை விளை மீன்களின் அடையாளத்தில் இருப்பினும் துடுப்புகள், வடிவம் இவற்றில் வித்தியாசப்படும். அந்த வகை அவ்வளவு சுவையோடு இராது.

விளை மீன்களை அடையாளம் காண கீழே படத்தில் இருக்கும் மீனில் குறிப்பிட்டு இருக்கும் அடையாளங்களை கவனிக்கவும்.

  •  மீனின் நடுவில் ஒரு நீண்ட கோடு அமைப்பு இருக்கும்.(வேறு சில மீன் வகைகளிலும் இந்த கோடு இருக்கும், ஆனாலும் அந்த மீன்களின் வடிவம் வேறு விதமாய் இருக்கும். விளை மீனின் அமைப்பில் இருக்கும் கறி மீன், சிலேப்பி மற்றும் சில ஏரி கெண்டை மீன்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள இந்த கோடு அமைப்பு உதவும்)
  • மேற்பகுதில் டைமண்ட் ஷேப் தெரிவதைப் போன்ற செதில் அமைப்பு இருக்கும்.
  •  வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் இருப்பது போன்றே உடலின் மேல் ஆங்காங்கே Bold செய்தது போல செதில்களின் கோடுகள் அழுத்தமாய் தெரியும். சில மீன்களில் போல்ட் செய்யப்பட்ட அமைப்பு சிக்சாக் வடிவத்தில் தெரியும்.


விளை மீன்களில் சில வகைகள் கீழே:

 (நம்ம ஊரில் அதிகமாய் கிடைக்கும் ரகம்)

 (அவ்வப்போது கிடைக்கும் ரகம் முதல் தர சுவையுடையது)



சென்னையில் கிலோ ரூ.200 லிருந்து ரூ.300 வரை விற்கப்படும் இந்த விளை மீன்கள் மற்ற இடங்களில் கிலோ ரூ.150 லிருந்து ரூ.200 வரை கிடைக்கும். விளை மீன்கள் சற்றே பழைய மீனாய் இருந்தாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கும். புது மீன்,பழைய மீன் என பார்த்த உடன் அடையாளம் காணுவது விளை மீன்களில் கடினம். செவுள் சிவப்பு நிறத்தில் தெரிந்தால் மட்டும் வாங்கவும். 

 விளை மீன்களை வறுவல் செய்யும் போது சற்று டீப் ஃபிரை செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். மேலும் சதைப்பற்றுடன்  இருக்கும் இந்த விளை மீன்கள் டீப் ஃபிரை செய்யும்போதே உள்ளே இருக்கும் சதையும் நன்றாக வெந்து சுவை கூடும். இல்லையெனில் உள் பக்கம் வேகாதது போன்று ஒரு வித பச்சை வாசத்துடன் சுவையும் மாறுபடும். குழம்பில் தேங்காய் அதிகமாய் சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தேங்காய் இல்லாமல் வைத்தாலும் சுவையோடவே இருக்கும்.

Sunday, April 12, 2015

ஊடகம் - ஊடான்

ஊடகம் மீன், சிறிய வகை மீன் இனத்தில் ஒன்று. இதன் பெரிய அளவு என்பது அரை கிலோ அளவிற்கு எடை கொண்டதாக இருக்கும். குழம்பு, வறுவல் என இரண்டிற்கும் ஏற்ற வகை மீன்களில் ஊடகம் குறிப்பிடப்பட வேண்டிய மீன். பொதுவாக குழம்பு,வறுவல் என இரண்டிற்கும் ஏதுவான மீன்களில் வறுத்த மீன்களைவிட குழம்பு மீன் சற்று மட்டுப்பட்ட சுவையிலேயே இருக்கும். ஆனால் ஊடகத்தில் பட்டி மன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு குழம்பு,வறுவல் என இரண்டிலுமே வேறு வேறு விதமான சுவைகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல பிரமாதமாய் இருக்கும்.


 பெரிய மார்க்கெட்டுகளில் கிலோ 150லிருந்து 200 வரை விற்பனையாகும் இம்மீன்களை மற்ற இடங்களில் கிலோ 300 வரை விற்கிறார்கள். ஊடகம் ரெகுலராக மார்க்கெட்டுகளில் கிடைப்பதில்லை. கிடைக்கும்போது விலையைக் குறித்து யோசிக்காமல் வாங்கிவிடுவீர்கள் ஒரு முறை இதன் சுவையை அறிந்துகொண்டீர்களேயானால்.

ஊடகம் மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை, சதைப்பகுதி மிகுந்த மென்மையாக இருக்கும் இம்மீன்களை ஃப்ரெஷ்ஷாக பார்த்து வாங்க வேண்டும். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் மீன்களை வெட்டும்போதே சதைத் துணுக்கு பிய்த்துக்கொண்டு வருவது போல இருக்கும். கவனமாக வெட்ட வேண்டியிருக்கும். இதுவே சற்றே பழைய மீனாய் இருந்தாலும் வெட்டும்போது வீணாய் போய்விடும்.

ஃப்ரெஷ் மீனாய் பார்த்து வாங்க செவுள் இரத்தச் சிவப்பில் இருப்பதையும், கண்கள் கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் பரிசோதித்து வாங்க வேண்டும் என்பதை ஏற்கனவே இன்னொரு பதிவில் பார்த்திருக்கிறோம். ஊடகத்தில் ஃப்ரெஷ் மீனைக் கண்டுகொள்வது மிகச் சுலபம். ஃப்ரெஷ் ஊடகம் கண்ணைப் பறிக்கும் பளபளப்போடு வெள்ளியைப் போல  மின்னும்.(பார்க்க முதல் படம்)

ஊடகம் மீனை அடையாளம் காணுவது குறித்துப் பார்ப்போம். ஊடகம் மீன் உடம்பு முழுவதும் அடர்ந்த செதில்களைக் கொண்டிருக்கும். உடலில் மேற்பகுதியில் கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல துடுப்பின் அமைப்பில் ஒன்று நீளமாக தனித்துத் தெரியும். சில நேரம் அவை உடைந்து போயும் இருக்கும், அதனால் குழப்பம் வரலாம்.


இதனால் இன்னொன்றையும் சரிபார்த்துக் கொள்ளலாம் மீனின் வயிற்றுப் பகுதி முடிந்து வால் ஆரம்பிக்கும் இடத்திற்கு முன்பாக சிறிய அளவில் துடுப்பு அமைப்பு இருக்கும். உடலின் மேற்பகுதி துடுப்பு அமைப்பின் மினியேச்சர் போல இது இருக்கும். ஆனால் இதில் இருக்கும் நீளமான அமைப்பு கடினமான முள்ளாக மிக அழுத்தமாக இருக்கும். 

 ஊடகம் மீன் குழம்பு வைக்கும் போது தேங்காய் சேர்த்தும் , தேங்காய் சேர்க்காமலும் என எப்படி வைத்தாலும் நல்ல சுவையுடன் இருக்கும். குறிப்பாக மிளகு,சீரகம் சேர்த்து வைக்கும் ஊடகம் மீன் குழம்பு வித்தியாசமான சுவையில் மீண்டும் மீண்டும் ஊடகத்தை வாங்கத் தூண்டும் வகையில் இருக்கும். 

Sunday, March 22, 2015

நகரை மீன் - red mullet - goat fish

செந்நகரை,நவரை ,கல் நகரை என்று பலவாறு அழைக்கப்படும் நகரை மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. பொதுவான பண்பாக சிவப்பு நிறத்தை கொண்டிருந்தாலும் நகரை மீன்களில் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் உண்டு. எனினும் சுவையில் ஒன்று போலவே இருக்கும். சிறிய வகை மீன் என்ற போதும் சதைப்பற்றுடன் இருக்கும். கீழே படத்தில் இருப்பவை நகரைகளில் சில வகை.



 குழம்பு,வறுவல் என இரண்டிற்குமே பிரமாதமான சுவையில் இருக்கும் இந்த நகரை மீன்கள் சகாயமான விலைக்கே கிடைக்கும். சென்னையில் ரெகுலராக கிடைக்கும் இம்மீன்களை கிலோ 80லிருந்து 100 வரை பெரிய மார்க்கெட்டுகளில் விற்கிறார்கள்.  சில இடங்களில் பத்து மீன்கள் இருக்குமாறு கூறுகட்டி நூறு ரூபாய்க்கு விற்பார்கள். அதிகபட்சமாக கிலோவிற்கு 120 வரை கொடுத்து வாங்கலாம்.

பொதுவாகவே சிறிய சைஸ் மீன்கள் சுத்தம் செய்ய நேரம் எடுப்பவை என்பதால் அளவில் சிறியதாக இருக்கும் நகரை மீன்களை மார்க்கெட்டிலேயே சுத்தம் செய்து வாங்கிக்கொள்வது நல்லது.

நகரை மீன்களை வறுக்கும் போது அதன் உடற்பகுதில் கத்தியால் மெலிதாய் கீறிவிட்டால் மசாலா   நன்றாக சேர்ந்து அட்டகாசமான சுவையில் இருக்கும். பாரை மீன்கள் போல தோல் அழுத்தமாய் இருக்கும் மீன்களுக்கு இந்த கீறல் முக்கியமாய் தேவைப்படும், மெல்லிய தோலைக்கொண்டிருக்கும் நகரைக்கு கீறல் தேவை இல்லை எனினும் வறுத்த பின் அந்த கோடுகள் பார்வைக்கு உனனே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும்.முள்ளில் இருந்து எளிதாக சதைப்பகுதியை பிரித்தெடுக்க முடியும் இந்த நகரை மீன்களை வைத்து ஃபிங்கர் ஃபிஷ் போன்ற ரெசிப்பிகளை மிகுந்த சுவையுடன் செய்யலாம். மேலும் குறைந்த விலையில் ரிச்சான டிஷ் கொடுத்த மாதிரியும் இருக்கும். வெறும் ரசம் வைத்து நான்கு துண்டுகள் நகரை மீன் வறுவல் இருந்தால் தட்டு தட்டாய் சோறு இறங்கும்.

நகரை மீன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சிறிய சைஸ் சங்கரா மீன்கள் பார்வைக்கு நகரைப் போல இருப்பதால் அவற்றையும் நகரை என்று தள்ளிவிடுவார்கள். சிறிய சைஸ் சங்கராவில் முள்ளில் இருந்து சதையை எடுத்து சாப்பிடுவது சிரமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நகரை சைஸில் இருக்கும் சங்கரா மீன் சாப்பிட ஏதுவானது கிடையாது எனலாம்.போலவே சங்கரா வாங்கும்போது நகரையையும் சேர்த்து கொடுப்பார்கள். சங்கரா மீன்கள் நகரையைவிட விலை கூடுதலாய் விற்கப்படும் மீன்கள் என்பதால் அதிக விலைக்கு நகரையை சங்கரா என்று விற்றுவிடுவார்கள். சிவப்பு நிறத்தில் இன்னும் நிறைய மீன்கள் உண்டு அவற்றையும் நகரை என்று விற்பார்கள். அவை நகரை என்று கன்ஃபார்ம் செய்துகொள்ள முதல் படத்தில் தெளிவாய் தெரியும் ஆட்டுத்தாடி அமைப்பை சரிபார்த்தால் தெரிந்துவிடும்.


Sunday, March 15, 2015

காரப்பொடி (Ponyfish)

பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.

மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு  500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும்  மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.

பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.





செதில்கள் இருக்காது,குடலின் சைஸ் மிக சிறியது என்பதால் சுத்தம் செய்வது எளிது. இவற்றின் மேல் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் தடிமனான முட்கள் இருக்கும். அவற்றை வெட்டுவது மட்டும் சிறிது சிரமாக இருக்கும். மீனின் உள்ளே நடு முள் மட்டுமே இருக்கும். அவையும் மிகுந்த கடினத்தன்மையுடனே இருக்கும். தலையும் மற்ற மீன்களைப் போல மென்று தின்ன இயலாத மாதிரி அழுத்தமாகவே இருக்கும். ஆனால் இரண்டு பக்கமும் இருக்கும் சதைப் பகுதியின் சுவையும் ,குழம்பில் விரவிக்கிடக்கும் இதன் வாசனையும் கவளம் கவளமாக சோற்றை இறக்கும்.பெரிய மீன்களின் தலை,வால் போன்றவற்றை வைத்து வைக்கும் மீன் குழம்பில் பேருக்கு இரண்டு காரப்பொடி சேர்த்தாலே அந்த குழம்பின் சுவை பிரமாதமாய் மாறிவிடும்.

இந்த காரப்பொடி மீனில் பெரிய சைஸ் கிடைத்தால் வறுக்கலாம் எனினும் குழம்பிற்குதான் இது மிக நன்றாக இருக்கும். காரப்பொடியின் கருவாடும் மிகுந்த சுவையுடையது.

காரப்பொடியை சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது மிளகு பூண்டு அதிகமாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்த்தே ஆக வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். சற்று கூடுதல் ஆனாலும் காரப்பொடியின் சுவை கிடைக்காது.

மீனை வாங்கும் போது செவுள் ரத்தச் சிவப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றாலும் குறைந்த பட்சம் சிவப்பு நிறமாவது தெரியும்படி இருக்க வேண்டும். கண்கள் கருப்பு நிறத்தில் மேலே முதலில் கொடுத்திருக்கும் படத்தில் இருப்பது போல இருக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் தெரிந்தால் அது மிக மோசமான கண்டிஷனில் உள்ள மீன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.